திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா தொடங்கியது!

Author: No Comments Share:

03dns055_phதிருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமறைகள் பாட, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று கோஷமிட, சங்கு, தாளங்கள் இசைக்க, சாரல்மழை தூவ, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப பெருவிழா நேற்று தொடங்கியது.
சைவ தலங்களில் தலையாயது திருவண்ணாமலை. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலமானவன் என்ற பொருள். பிரபஞ்சம் நீள்வட்டத்தில் இயங்குகிறது என்ற தத்துவத்தை நமக்கு விளக்குவதுதான் லிங்க வழிபாடு. உலகில் மிகவும் பழமையானது சிவவழிபாடு ஆகும்.
சிவபெருமான் திருவண்ணாமலையில் மலையாக காட்சியளிக்கிறார். இந்த மலையில் சித்தர்கள் ரூபமாகவும், அரூபமாகவும் வாழ்ந்து வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் இறை அருள் வேண்டி கிரிவலம் வருகின்றனர்.
மலையை சுற்றி 360 புனித தீர்த்தங்கள் உள்ளதாக புராண நூல்கள் கூறுகின்றன. இந்த தலத்தை நினைத்தாலே முக்தி என்று ஞானிகள் கூறுவர். ஏராளமான ஞானிகள் இங்கு வாழ்ந்து ஞானம் அடைந்துள்ளனர்.
இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் விழாக்களில் பிரம்மோற்சவம் எனப்படும் கொடியேற்று விழா, சுவாமி சன்னதியில் ஆனி மாதத்தில் தட்சிணாயின கால கொடியேற்றம், மார்கழி மாதம் உத்ராயண கால கொடியேற்றம் மற்றும் கார்த்திகை தீப விழா கொடியேற்றம் என மூன்று கொடியேற்றங்களும், அம்மன் சன்னதியில் ஆடி மாத ஆடிப்பூர கொடியேற்றமும் நடக்கும். இதில் தலையாயது தீபத் திருவிழா கொடியேற்றம் ஆகும். இந்த விழா தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.
துர்முகி ஆண்டான இந்த ஆண்டு கார்த்திகை தீப விழாவின் பூர்வாங்க வழிபாடான ஊர்க்காவல் தெய்வத்தை வழிபடும் துர்க்கை உற்சவம் கடந்த 30ம் தேதியும், கோயில் காவல் தெய்வத்தை வழிபடும் பிடாரி அம்மன் உற்சவம் டிசம்பர் முதல் தேதியும் சிறப்பாக நடந்தன. இதையடுத்து விநாயகர் உற்சவம் நேற்று முன்தினமும் நடந்தது.
இந்த பூர்வாங்க வழிபாடுகள் முடிந்து, பெருவிழா என்று அழைக்கப்படும் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, அருணாசலேசுவரர் மற்றும் அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தன. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேசுவரர், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரம் முன்பு தனித்தனி வாகனங்களில் 7 மணிக்கு மேல் எழுந்தருளினர்.
காலை 7.50 மணிக்கு மேளதாளங்கள், சங்கு, தாரை, பேரிகை, கொம்பு, உடல், பெரும்தாளம், பிரம்மவாத்தியம், குழல் வாத்தியம் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ஓதுவார்கள் திருமுறைகளை இசைக்க, பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று மெய்யுறுகி விண்ணதிர கோஷமிட, வாணவேடிக்கை முழங்க, 67 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் இளவரசு பட்டம் கண்ணன் சிவாச்சாரியார் கொடியேற்றினார். தொடர்ந்து கணபதி தாளம், ரிஷப தாளம், கல்ப, அனுகல்ப, வேதாகம கிரியைகள் நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தனித்தனி விமானங்களில் எழுந்தருள மாடவீதி உலா நடந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

Previous Article

அனைத்து ரயில்நிலையங்களிலும் இனி ஸ்வைப் வசதி

Next Article

திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவம்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *