எம்ஜிஆர் பிறந்தநாளில் தீபா அரசியல் பிரவேசம்

Author: No Comments Share:

deepa-01சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளில் அரசியலில் குதிக்கிறார் தீபா. இது குறித்து அவர் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது :–
ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறோம். வருங்காலம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்பவும், இந்த தலைமுறைக்காகவும், சமுதாயத்திற்காகவும் நல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் பெயரையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
தீபா அளித்த பேட்டியின் முழுவிவரம் :
கேள்வி : புதிய அரசியல் கட்சி தொடங்குவீர்களா?
பதில் : ஒரு தீர்க்கமான முடிவெடுத்து மிக விரைவில் என்னுடைய புதிய அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன்.
கேள்வி : ஜெயலலிதா மறைந்த 30ம் நாள் நிறைவுக்கு பிறகு மிக அதிகளவில் தொண்டர்கள் இங்கே வருகிறார்களே… அவர்களின் உணர்வுகளை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?
பதில் : அம்மா மீது எவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.
கேள்வி : ஜெயலலிதா என்பவர் ஒரு மிகப்பெரிய ஆளுமையும், செல்வாக்கும் உடையவர். அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்ட மக்கள் உங்களை ஏற்பார்களா?
பதில் : மக்களின் விருப்பம் அறிந்து நான் செயல்படுவேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் இப்போது செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டால்தான் தொடர்ந்து என்னுடைய பணிகளை நான் முன்னெடுத்து செல்வேன்.
கேள்வி : அரசியலுக்கு வரவேண்டும் என்பது உங்கள் ஆசையா? மக்களின் விருப்பமா?
பதில் : மக்களின் விருப்பம்தான். எனக்கும் அரசியல் ஈடுபாடும், விருப்பமும் உண்டு. இதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
கேள்வி : மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நுாற்றாண்டை இம்மாதம் 17ம் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்திருந்தீர்கள். அப்போது உங்களின் புதிய அரசியல் பிரவேச அறிவிப்பு இருக்குமா?
பதில் : நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
கேள்வி : அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலா ஆதரவு நிலை எடுத்திருக்கிறார்களே, அவர்களில் யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா?
பதில் : யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. தொண்டர்கள்தான் என்னை சந்தித்து வருகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களை தெரிந்து என்னுடைய எதிர்காலம் குறித்து நானும் ஆலோசித்து ஒரு நல்ல முடிவெடுத்து அறிவிப்பேன்.
கேள்வி : மக்களை சந்திப்பதற்காக மாவட்டம் தோறும் பிரசார சுற்றுப்பயணம் செய்வீர்களா?
பதில் : இப்போதைக்கு அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை. தொண்டர்களின் கருத்துக்களை அறிந்து தேவையென்றால் பயணம் மேற்கொள்வேன்.
கேள்வி : ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டுமென அந்த தொகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்களே?
பதில் : அனைவரின் விருப்பத்தையும் கேட்டு முடிவெடுப்பேன்.
கேள்வி : நேற்று இரவு முதல் திடீரென உங்களுடைய பேனர்கள், சுவரொட்டிகள் கிழிக்கப்படுகிறதே, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : இது வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் செய்யும் செயல். இதைபற்றி கவலையில்லை.
கேள்வி : மிகப்பெரிய தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த கட்சி தலைமை பொறுப்பை தொண்டர்களின் வெறுப்புக்கு ஆளான, சிறைதண்டனை பெற்ற சசிகலா ஏற்றிருக்கிறாரே, இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில் : இதை நீங்கள்தான் மக்களிடம் கேட்டு எனக்கு சொல்ல வேண்டும்.
கேள்வி : புதிய அரசியல் பயணம் என்றீர்களே, புதிய கட்சி தொடங்க திட்டமா?
பதில் : அரசியல் பிரவேசம் தொடங்குவேன் என்று கூறியிருக்கிறேன். அது எப்படி என்பது குறித்து பிறகு விரிவாக சொல்லுகிறேன்.
கேள்வி : திடீரென உங்கள் வீடு உள்ள பகுதியில் அதிக அளவிற்கு காவலர்களை குவித்திருக்கிறார்களே?
பதில் : ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகிறார்கள். இன்னும் கூடுதலாக வருவார்கள் என்று எதிர்பார்த்து அவர்களை அனுப்பியிருக்கலாம்.
கேள்வி : அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்துவது போல நீங்களும் உங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவீர்களா?
பதில் : நிச்சயமாக. கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை முழுமையாக தெரிந்தபின்தான் முடிவெடுப்பேன்.
கேள்வி : ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று உங்களை சொல்கிறார்களே?
பதில் : அது மக்கள் விருப்பம். நானாக சொல்லவில்லை.
கேள்வி : அதிமுகவின் மூத்த தலைவர் பி.ஹெச். பாண்டியன் உள்ளிட்டோர் உங்களோடு தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வருகிறதே?
பதில் : இது தவறான செய்தி. யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
கேள்வி : அதிமுக நிர்வாகிகள் தொடர்பு கொண்டால் பேசுவீர்களா?
பதில் : நிச்சயமாக. யார் தொடர்பு கொண்டாலும் அவர்களோடு பேசுவேன். அவர்களின் ஆலோசனைகளை கேட்பேன்.
கேள்வி : உங்களுடைய சகோதரர் தீபக் உங்களுக்கு ஆதரவளிக்க வில்லையே?
பதில் : அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
கேள்வி : உங்களுடைய வளர்ச்சியை தடுக்க ஏதாவது சதி நடக்கிறதா? உங்களுக்கு அச்சுறுத்தல் உண்டா?
பதில் : அப்படி ஏதும் சதி நடப்பதாக தெரியவில்லை. அச்சுறுத்தல் ஏதும் இல்லை.
கேள்வி : உங்களுக்கு வரும் ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : இது எதிர்பாராமல் நடந்து வருகிறது. இதை யாரும் உருவாக்கவில்லை. அம்மா இருந்த இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க விரும்பாத தொண்டர்களின் மனநிலை தான் இதை உணர்த்துகிறது.
கேள்வி : ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதியே கூறியிருக்கிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : இதில் எனக்கென தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.
கேள்வி : ஜெயலலிதா மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அதுபற்றிய தகவலை வெளியிடாததால்தானே இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழுகிறது.
பதில் : நிச்சயமாக. அம்மாவுக்கு நடைபெற்ற அனைத்து சிகிச்சை முறைகளையும் முழுமையாக தெரிவிக்க வேண்டும். மக்கள் அதை தெரிந்துகொள்ள உரிமை உண்டு.
கேள்வி : அதிமுக பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவே முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகிறார்களே?
பதில் : இதுபற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு இது யூகமாகதான் உள்ளது.
கேள்வி : சசிகலா தேர்தலில் நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவீர்களா?
பதில் : அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை.
கேள்வி : கட்சியில் பிளவு ஏற்படாமல் இருக்க நீங்கள் சசிகலாவை நேரடியாக சந்திக்கும் எண்ணம் இருக்கா?
பதில் : இதுபற்றிய கேள்விக்கே இப்போது அவசியமில்லை.
கேள்வி : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை செயல்படவிடாமல் சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாக கூறுகிறார்களே?
பதில் : இதுபற்றி பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி : அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள்?
பதில் : குறுகிய காலத்தில் மிக விரைவில் வெளியிடுவேன்.

Previous Article

ஜல்லிக்கட்டுக்கு இடையூறான சட்ட விதிகளை நீக்க வேண்டும்

Next Article

எந்த சூழ்ச்சிக்கும் ஆளாகாதீர்: அதிமுகவினருக்கு சசிகலா கட்டளை

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *